கோயில்கள்

ஆவணி விரதங்கள்

மாதங்களுக்கு எல்லாம் அரசன்’என்றுபொருள். ஆவணி மாதம் சிம்ம மாதம் என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சித்திரை மாதம் புத்தாண்டாக இரு...

மாதங்களுக்கு எல்லாம் அரசன்’என்றுபொருள். ஆவணி மாதம் சிம்ம மாதம் என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சித்திரை மாதம் புத்தாண்டாக இருப்பதுபோல, கேரளத்தில் ஆவணி எனப்படும் இந்த சிம்ம மாதமே புத்தாண்டு துவக்க மாதமாக இருக்கிறது. இம்மாதத்தில்தான் மகாவிஷ்ணு, வாமனராக வந்து மகாபலி மன்னனுக்கு மோட்சம் கொடுத்தருளினார். இந்நாளில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
ஆடி மாதக் கொண்டாட்டங்கள் ஆவணியிலும் தொடரும். ஆவணி என்றால் ‘மாதங்களுக்கு எல்லாம் அரசன்’என்று பொருள். ‘சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை’என்கிறார் அகத்திய மாமுனி. ஆவணி மாதத்தில்தான் இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
ஆவணி மாதத்தில் பல பண்டிகைகள் வருகின்றன. முக்கியமாக ஆவணி அவிட்டம் அந்தணர்களுக்கான பண்டிகை. அந்தணர் என்பவர் வேதம் ஓதுவோர். வேதங்களையும், சாஸ்திரங்களையும் ஓதுமுன், பவித்ரமாக இருக்க வேண்டும் என்பதால் மனசும், தேகமும் சுத்தப்படுத்த இந்த ஆவணி அவிட்டத்தன்று பூணூல் மாற்றிக் கொள்வது பழக்கத்தில் இருந்து வருகிறது. நல்ல காரியங்கள் செய்யும் போதும், அதேபோல் அசுத்தம் ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் அந்த தோஷத்தைப் போக்கவும் பூணூல் மாற்றிக் கொள்வது வழக்கம். அதுபோல் வேத ஆரம்பத்திலும் போட்டுக் கொள்வதும் வழக்கம். ஸ்ராவண மாதத்தில் ‘வேதாரம்பம்’ தொடங்குகிறது.
இந்த ஸ்ராவண மாதம், வேத ஆரம்பத்துக்காக ஏற்பட்டது ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றிக் கொள்ளுதலும். இன்றைக்கு வேத ஆரம்பமோ, சாஸ்திர அறிவோ இரண்டாம் பட்சமாய்ப் போய் பூணூல் மாற்றிக் கொள்வது மட்டுமே பிரதானமாக நிற்கிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் போட்டுக் கொள்வது ஒரு அங்கம். அவ்வளவுதான். அதுவே பிரதானமல்ல. உபாகர்மா தான் பிரதானம். மந்திரங்கள் தான் முக்கியம். இன்றைக்கு ஆவணி அவிட்டத்தன்று நம் மக்கள், அலுவலகம் போகிற அவசரத்தில் பூணூலை மட்டும் போட்டுக் கொண்டு மந்திரம் ஏதும் சொல்லாமல் கிளம்பி விடுகிறார்கள்.
இது மிகத் தவறு. அன்று ஒரு நாளாவது மந்திரங்களை முழுமையாகச் சொல்லவேண்டும். அதன் தொடர்ச்சியாக காயத்ரி ஜபம் செய்து அன்று காயத்ரி தேவியைத் துதித்து வழிபட்டால் எல்லா நலன்களும் கிடைக்கும். இம்மாதத்தில்தான் சாதுர்மாஸ்ய விரதம் வருகிறது. சன்யாசிகள் நான்கு மாதங்கள் தொடர்ந்து ஓரிடத்தில் முகாமிடுவார்கள். அது நதிதீரமாகவோ, புண்ணியத் தலமாகவோ இருக்கலாம். சில கிரஹஸ்தர்கள் கூட இவ்விரதம் இருப்பார்கள். இச்சமயத்தில் தான் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அர்த்த ராத்திரியிலே பிறந்தாலும் அஞ்ஞான இருளை அகற்றும் கீதையை உலகுக்கு வழங்கியவர் அவர்.
கிருஷ்ண பரமாத்மாதான் முதல் ஜகத்குரு. அர்ஜுனனை ஒரு கருவியாகக் கொண்டு அகிலத்துக்கு அவர் அளித்த உபதேசங்கள் அத்தனையும் ரத்தினங்கள். அகிலம் முழுதும் தானேவாகவும், தன் சின்ன வாயினுள் உலகம் முழுதையுமாகவும் காட்டியவர் கிருஷ்ண பரமாத்மா. உலகில் நல்லவனவற்றைக் காத்து தீய சக்திகளை அழிக்க யுகம் தோறும் தான் பிறப்பதாக கீதையில் அவர் சொல்லியிருக்கிறார். அவரே படைப்புக் கடவுளாகவும், காக்கும் கருணாமூர்த்தியாகவும் சம்ஹரிக்கும் சர்வேஸ்வரனாகவும் விளங்குபவர். பகவானின் பல திருவிளையாடல்களை, ஸ்வரூபங்களையெல்லாம் பாகவதத்தில் கிருஷ்ணாவதாரத்தில் தான் காணமுடியும்.
பரிபூரணமான அருள்பாலிப்பு நிகழ்த்துபவர் கிருஷ்ண பரமாத்மா. அவரது பிறந்த புண்ணிய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அடுத்தது விநாயக சதுர்த்தி. மிக அதிகமான மக்களின் ஆதர்ச தெய்வம் விநாயகர். மிக எளிமையானவர். தனிக் கோயிலிலும் இருப்பார். தெரு முக்கிலும் உட்கார்ந்திருப்பார் கூரையே இல்லாத அரசமரத்தடியிலும் இருப்பார். வேண்டுவோரின் துயர் துடைப்பது மட்டுமே முக்கிய பணியாய்க் கொண்டு அருள்பாலிப்பவர். பள்ளிக்கூட சிறுவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது முதற்கொண்டு அனைத்துக்கும் அவரைத்தான் மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

இம்மையில் மட்டுமின்றி மோட்சம் அளிப்பது வரை அனைத்துக்குமான மூலகாரணம் அவர். நாம் எத்தொழிலைச் செய்தாலும் முதலில் விநாயகரைத் துதித்துப் பின்தான் தொடங்குவோம். நம் விக்னங்களைக் களைவதால் அவர் விக்னேஸ்வரர் ஆகிறார். சர்வகாரியத்திற்கு மூலாதாரமாக விளங்குபவர். அத்தகைய விநாயகரின் அவதார தினமான விநாயக சதுர்த்தியும்  இம்மாதம்தான் வருகிறது. ‘இந்தக் காரணத்துக்காக நான் இவ்வளவு ஆண்டுகள் விரதம் இருக்கப் போகிறேன்...’ என்று சங்கல்பம் செய்துகொண்டு, அத்தனை வருடங்களும் சதுர்த்தி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு.

அவர்கள், ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தி அன்றுதான் தங்களது விரதத்தைத் தொடங்குவார்கள். தொடர்ந்து 21 ஆண்டுகள் வரை சதுர்த்தி விரதம் மேற்கொள்வோரும் உண்டு. அவ்வளவு காலம் விரதத்தைத் தொடர முடியாதவர்கள், தொடர்ந்து 7 ஆண்டுகள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள், 21 சதுர்த்திகளில் விரதம் இருந்து, அதற்கு அடுத்தாக வரும் ஆவணி சதுர்த்தியில் விரதத்தை நிறைவு செய்யலாம். ஆவணி மாதம் வரும் மூல நட்சத்திரமும் சிறப்பு பெற்றதுதான். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, புட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை... என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும். கேரள மக்களால் கொண்டாடப்படும் உலகப் புகழ் பெற்ற திருவிழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம்தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

மலையாள தேசத்தை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தி கதைதான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்குக் காரணம். ‘அசுர குரு சுக்கிராச்சார்யர் சொல்லும் வழிப்படி ஆட்சி செய்கிறார் மகாபலி’என்கிற தேவர்களின் முறையீட்டை அடுத்து, அவரை வாமனனாக வந்து ஆட்கொண்ட மகாவிஷ்ணு, மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கவும் அருள்பாலித்தார். அதன்படி, ஒவ்வொரு ஓணம் பண்டிகை அன்றும் அவரது தியாகத்தை, வள்ளல் தன்மையை கேரள மக்கள் நினைவுகூர்கிறார்கள். அந்த நாளில் மகாபலி தங்களது இல்லங்களுக்கும் வருவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

மகாபலியின் வருகையை மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாக தங்களது வீட்டின் முன் அத்தப்பூ கோலம் போடுகிறார்கள், வீடு முழுக்கத் தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள். தங்களது மகிழ்ச்சியைப் பார்த்து, மகாபலியும் மகிழ்வதாக நம்புகிறார்கள். தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரத நாட்களாகும். 

Related

புதிய செய்திகள் 1578240179070182465

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item