கோயில்கள்

ஆறுமுகம் அவதரித்த வைகாசி விசாக விரதம் இன்று....

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினம் என்பதால் வைகாசி விசாகம், விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை ப...


ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினம் என்பதால் வைகாசி விசாகம், விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.


இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் துன்பங்களைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று, தங்களது குறைகளைக் கூறி முறையிட்டனர். கருணையின் கடலாகிய சிவபெருமான், அசுரர்களின் கொடுமையில் இருந்து தேவர்களைக் காப்பாற்ற விரும்பினார். இதனால் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அந்த ஆறு தீப்பொறிகளையும், வாயு மற்றும் அக்னி தேவர்கள் கங்கையில் கொண்டுபோய் விட்டனர்.


கங்கை அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே தாமரை மலரில் ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக, அந்தக் குழந்தைகளுக்கு பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினம் என்பதால் வைகாசி விசாகம், விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதே வைகாசி விசாக நட்சத்திரத்தில் பல ஞானிகள் பிறந்திருக்கிறார்கள். சித்தார்த்தன் என்னும் இயற்பெயர் கொண்ட புத்தர் பிறந்தது இந்த தினத்தில் தான். அதே போல் அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும், ஜோதி நிலையை அடைந்ததும் கூட இந்த வைகாசி விசாக நாளில்தான் என்பது சிறப்புக்குரியதாகும்.இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்தும், அலகு குத்தியும் இறைவனை வழிபடுவார்கள்.
விரதம் இருப்பது எப்படி?விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரி வலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெறும்.

Related

புதிய செய்திகள் 6856396893307612104

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item